Friday, April 29, 2011

உன்னைப்பற்றிய நினைவுகள்

நாள் முழுதும் கழிகிறது
உன்னைப்பற்றிய நினைவுகளால்
மட்டும்!!
பனிக்காற்றின் குளிர்ச்சியில்
இளங்காலை வெப்பத்தில்
வானொலியின் காதல் பாடலில்
அவசரச் சமையலில்
மின்னஞ்சல் வாசிக்கையில்
குறுந்தகவல் சத்தத்தில்
மதிய உணவு நேரத்தில்
ப‌ணிமுடித்துக் கிள‌ம்புகையில்
பேருந்து ப‌ய‌ண‌த்தில்
நட்சத்திரங்களை,நிலவை,வானை ரசிக்கையில்
போர்வையின் மென்மையில்
என் க‌ன‌வில்
என
மறக்க நினைத்தும்
முடியாமல்
என் வாழ்வின்
எல்லாக் கணங்களிலும்
உன்னையே யோசித்தபடி இருக்கையில்
உன் நினைவகற்றி வாழ
ஒரு ம‌ணித்துளிக்கூட‌
‌முடிவ‌தில்லையே என்னுயிரே...

பிரிவின் வலி ..


உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது..


பின் இரவு நேரங்களில் அது
பேயாட்டம் ஆடுகிறது..


ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்
உன் நினைவுகளை கலைத்து போடுகிறது..


உன் வாசனையை, அறை எங்கும்
நிரப்பி மாயாஜாலம் செய்கிறது..


காதல் வலியால் துடிப்பதை
குரூரமாய் பார்த்து சிரிக்கிறது..


பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில்,
பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும்.


கண்ணை மூடி தூங்க முனைகையில்,
காதல் கதைகளை உரக்க பேசுகிறது.


சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில்,
சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது.


அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என
அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.


உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது...

நேற்று இறந்து விட்டேன்

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...

Wednesday, April 27, 2011

தொலைத்துவிட்டுத் தவிக்கிறேன்...!!

மெளனமாய் இருக்கிறேன்
நான்.
நான்...
பேசியபோது
நீ...
மெளனமாய் இருந்ததால்...
நிறையவே பேசுகிறாய்
இப்போது-எல்லாம்
நீ....
தொலைத்துவிட்டுத்
தவிக்கிறேன்
உன்னை..
தவறுதான்....
என்...
தவிப்புக்களும்
ஏக்கங்களும்
என்...
வார்த்தைகளுக்குள்
குழம்பித் தவிப்பதை
கவனித்து இருக்கிறாயா.
நீ...
எனக்குள்
பறந்து
கொண்டிருக்கிறாய்
உயிரோடு உரசியபடி....
பூட்டவும்
முடியவில்லை.
விட்டு விடவும்
முடியவில்லை.
என்ன
செய்ய நான்....
யாராவது
நினைத்தல் என்பது
தும்மல் என்றால்
நொடிக்கொருதரம்
தும்மிக்கொண்டேயிருப்பாய்.
எனக்கும்
தும்மல் வரும்
எப்போதாவது
நினைக்கிறாயா
என்னை
நீ...
குளிர்ந்து இறுகிக்
கிடக்கிறாய்
பனிக்கட்டியாய்
மனதுக்குள்.....
வலிக்கிறது.
தடுக்கி விழுந்து
எழும்புகிறேன்.
வெளியில் தெரியாத
உள்
காயங்களோடு !!!

Monday, April 18, 2011

எதுவரை...

தனித்திருக்கிறேன்
விழித்தும் தானிருக்கிறேன்
பசித்தும்கூட இருக்கிறேன்

திருமென்ற உறவினை
காதலெனும் உணர்வுகளால்
அடித்தெழுத இயலவில்லையென
சொல்லிச் சென்றவன் நீ

உன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க
என் உணர்வுகளுக்கு நான்
தனித்திருக்கிறேன்!

Sunday, April 17, 2011

தவறவிடும் ஏதோ ஒன்று

சட்டென்று தனிமை
ஆட்கொண்டுள்ளது
அல்லது
தனிமை நோக்கி நகர்ந்திருக்கிறேன்

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி கைப்பேசியை பார்க்க வேண்டியிருப்பதில்லை
மதிய உணவை சுலபமாக தவிர்க்கமுடிகிறது
அதிகாலையில் அமைதியாய் எழுகிறேன்
முந்தைய நாளில்
எவரோடு என்ன நிகழ்ந்திருக்கும்
என்ற கவலைகள் இருப்பதில்லை.
என்ன உடுத்தலாம்
என யோசிக்க வேண்டியிருப்பதில்லை

இக்கணத்தில்
என்ன செய்துகொண்டிருப்பானோவென
எக்கணமும் பூத்துக்கொண்டிருந்த
நினைவு மலர்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் காய்ந்து
உதிர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆயினும் அவன்
கொடுத்துப்போன ஏதேனும் ஒன்றை
பார்க்கநேரும் நொடியில்
சூல்கொண்டு
கனத்து இறங்கிக் கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளிக்குத் தெரியும்
இனியவன்
தன் குறுங்கூடுவிட்டு
பறந்து பாடலாம்
வான்வெளியெங்குமென.

நீயும் விதிவிலக்கல்ல.

நானென்றால்
கல்லறைக்கூட
கதவடைத்துக்கொள்ளும் போது ...??!!!
நீ மட்டுமென்ன
காதலுடனாக்
காத்திருக்கப் போகிறாய்??!!!

கடைசி சந்திப்பு..


வ்வொரு சந்திப்பின் முடிவிலும்
உள்ளும் புறமும்
ஒன்றுகூடி ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றுகின்றன
இதுவே அவனுடனான
கடைசி சந்திப்பென..

அம்முடிவை கயிறாக்கி
மனதை சுற்றி இறுக்கிக்கட்டி
இருளில் இடம் பெயர்க்கிறேன்.

நித்தம் நிகழும் ஒவ்வொரு செயலும்
அவனையே நினைவூட்டும் போது
முட்டி மோதியும்
திமிறித் துடித்தும்
அலறி அழுதும்
முடிச்சுகள் அவிழாததால்
அமைதியாகிறேன்.

காலம் சில கடந்து
மீண்டும் மீண்டு வருகிறான்
முழு மதியாய் முகம் மலர்கிறான்
முடிச்சுகள் மூர்ச்சையிழந்து விடுகின்றன..

நலம் விசாரிக்கிறான்
முன் போல
அதிகாரம்
அரவணைப்பு
குற்றம்
குறை
கோபம்
கண்ணீர்
வெட்கம்
காதல்
கூடல்
என எதுவுமில்லாமல்
நட்பெனும் போர்வை போர்த்தி
கடந்தகாலம் கலக்காமல் கவனமாக
விடியும் வரை
பேசிக் கொண்டு விடை பெறுகிறான்...

மீண்டும்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
இது தான் அவனுடனான
கடைசி சந்திப்பென...